Saturday, April 20, 2013

கண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா??.



தமிழ் காவியங்களுள் தலைச் சிறந்த சிலப்பதிகாரத்தை அனைவரும் படித்திருப்போம்.ரசித்திருப்போம்.பலரின்  கண்ணோடத்தில்,கற்புக் கரசி எப்போதும் கண்ணகி தான்.எனது பார்வையில் எனக்கு எப்போதும் மாதவி தான் கற்பில் தலைச் சிறந்த காவியத் தலைவி.

இந்த இடுக்கையின் நோக்கம் கற்பில் சிறந்தவள் யார்? என்று இருவரையும் ஒப்பிடுவதல்ல.வரலாறு நமக்கு சொல்லவருவதை, நாம் சரியாக எடுத்துக் கொள்கிறோமா? என்பது தான்.நம்  வரலாற்று காப்பியங்களிலும், சரித்திரங்களிலும் மறைந்துவிட்ட  பாத்திரங்கள் நிறைய இருக்கின்றன. அப்படி மறைந்து, மறந்துக் கிடக்கும்  மாதவியின் புகழ் உரைப்பதே இந்த இடுக்கையின் நோக்கம்.

நான் சிலப்பதிகாரத்தை எனது 15 ஆம் வயதில் பத்தாம் வகுப்பில் படித்தேன்.என்னை கேள்விக் கேட்டு எழுப்பிவிடுவதையே வழக்கமாகக் கொண்ட என் தமிழ் ஆசிரியை அன்றும், சிலப்பதிகாரத்தை நடத்தி முடித்து விட்டு, "ஆதி பாடம் புரிந்ததா??இப்போது சொல் "கற்பில் சிறந்தவள் யார் என்றார்??"

தயக்கமே இல்லாமல் கண்ணகி என்று பதிலளித்தேன்.விளக்கும் கொடு என்றார்.

தவறான நீதி இழைத்தது அரசன் என்ற போதும், அவனை எதிர் கேள்வி கேட்டு தன் கணவன் குற்றமற்றவன் என நிருபித்தாள்.பத்தினி பெண்கள் கோபமாய் பார்த்தால் பச்சை மரங்களும் பற்றி எரியும் என்ற கூற்றின் படி கண்ணகியின் கோபத்தில் மதுரையே எரிந்தது.எனவே கண்ணகியே கற்புக் கரசி என்று பதிலளித்தான்.

இல்லை என மறுத்து எனக்கு மாதவியின் புகழை புரியவைத்த என் ஆசிரியரின் விளக்கம் பின்வருமாறு.

தான் தவறான நீதி தந்து ஒரு பெண்ணின் வாழ்வையே அழித்து விட்டோம் எனத் தெரிந்த அடுத்தகனமே பாண்டிய மன்னன் தன்  மனைவியுடன் உயிர் நீத்தான் என்பதை தான் வரலாறு சொல்கிறது.அவன் இறப்பின் பின்னும் சினம் அடங்காமல் தான் கண்ணகி மதுரையை எரித்தாள் .அவளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு பெண்ணின் கோபம் அழிவில் முடியக் கூடாது என்பதைத்  தான்.

பிறப்பால் கண்ணகி உயர்ந்த குலத்தில் பிறந்தவள்.நல்ல சூழலில் நல்ல  பழக்க வழக்கங்களுடன் பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தவள்.அவள் வழி மாறியிருந்தால் தான் ஆச்சரியமே தவிர,அவள் கற்பில் சிறந்து இருந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.


மாதவி பிறப்பால் தாசி குலத்தில் பிறந்து, தாசிகள் நிறைந்த இடத்திலேயே வளர்ந்தவள்."எந்த பிள்ளையும் நல்லப் பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே " என்ற கண்ணதாசனின் வரிகளைக்   கூட பொய்யாக்கி விட்டால் மாதவி.மாதவியின் அன்னை வஞ்சக எண்ணம் கொண்டு மாதவிக்கே தெரியாமல் கோவலனின் சொத்துக்களை கண்ணகியிடம்  இருந்து கொஞ்சம் கொஞ்சமாய்  பறித்தவள் என்று தான் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.அப்படி ஒரு அன்னையின் கைகளில் வளர்ந்த மாதவி உள்ளத்தாலும் உடலாலும்  தூய்மையாக இருந்தது தான் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

மாதவியை எந்த ஒரு இடத்திலும் தவறு செய்தவளாக சிலப்பதிகாரம் வர்ணிக்கவில்லை.கோவலன் தன்னுடன் வாழ்ந்த போதும், அவனை கண்ணகியை சென்று பார்க்கும் படி வற்புருத்தியவள் மாதவி.கோவலன் அவளை நீங்கியதும் அவள் நினைத்திருந்தால் தாசியாக வாழ்ந்திருக்கலாம்.அவள்  அவ்வாறுச்  செய்யவில்லை. அவள் மனதாலும் உடலாலும்  வாழ்ந்தது கோவலன் ஒருவனுடன் மட்டுமே.கோவலன் அவளை நீங்கி கண்ணகியுடன் இணைந்ததும்,அவள்  அன்னை வஞ்சகமாய் பறித்த அனைத்துச்  சொத்துக்களையும் மீட்டுத் தந்துவிட்டு, பௌத்த மத துறவியானவள் மாதவி.தாசி குலத்தில் பிறந்த ஒருத்தி வேறு ஒருவனை ஏற்க மனமில்லாமல் துறவியானது உங்களை ஆச்சரியப் பட வைக்கவில்லையா?? இப்போதுச்  சொல்லுங்கள் பெண்மையில் சிறந்தவள் மாதவி அன்றோ?

ஆனால், இன்று வரை நம்மில் பலரும் கற்பின் வரலாற்று உதாரணாமாய் கண்ணகியைத் தான் சொல்கிறோமே தவிர, மாதவியை மறந்துவிட்டோம்.

இனிவரும் தலைமுறையினருக்குச்   சிலப்பதிகாரம் கற்பிக்கப்படுமா  என்றறியேன் நான்.ஒருவேளைக்  கற்பிக்கப் பட்டால், மறக்காமல் மாதவியின் புகழ் உரையுங்கள்.தவறானச்  சூழ்நிலையிலும், தவறு செய்ய  வாய்ப்பு கிடைத்தப் போதும் மாறாத மனங்களே மண்ணில் சிறந்தவை.


இந்தப் பதிவை மாதவியின் புகைப் படத்துடன் பதிவிடத்தான் ஆசைகொண்டேன் .அவளின் நல்லதொருப்  புகைப்படம் கூடக் கிடைக்கவில்லை இணையத்தில்.

அன்புடன்,

ஆதிரா.


Saturday, April 13, 2013

அயல்நாட்டில் என்னை அசரவைத்தவர்கள்...

 நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத நேரம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.நம் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள் அனைத்தும் நம் மனதில் பதிந்து விடுவதில்லை.ஒரு சில மனிதர்கள் மட்டுமே பதிவார்கள்.

அப்படி என்னை அயல்நாட்டில்  அசத்தி, என் மனதில் பதிந்தவர்களைத்  தான் எழுதியிருக்கிறேன்.




1) சரவணபவனில் மெனு கார்டை பார்க்காமலேயே thaali rice, thosa  என்று வேண்டியதைப் பெற்று கையாலேயே சாப்பிடும் வெள்ளையர்கள்.

2) கடைத்தெரு சுற்றி வருகையில் திடீரென வழிமறித்து , நீ இந்தியப் பெண்ணா ??உனக்கு சேலைக் கட்டத் தெரியுமா??எப்படிக் கட்டுவதென்று எனக்குச் சொல்லித் தர முடியுமா ?? என்றுக் கேட்ட வெள்ளைக்காரப்  பெண்கள் கூட்டம்.

3) பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த குழந்தையாயிற்றே என்று "salut , tu vas bien??" என்றால் "அக்கா நான் நல்லாத்  தமிழ் பேசுவேன்" என்றென்னை செருப்பால் அடித்த என் நண்பரின் குழந்தை.

4)  உள்ளூரில் இருக்கும் பெண்களில் பலரும்   அயல் நாட்டு மோகத்தில் அலைகையில், அயல் நாட்டின் அன்றாட வாழ்வில் ஊறிப்போன பின்னர் கூட உடையில் கவனமாய் இருந்து , இன்னும் கல்லு வச்ச மூக்குத்தியை மாற்றி வளையமாக்காத எம் குலப் பெண்கள்(ஒரு சிலரே).

5) ஐரோப்பிய வெள்ளை அழகிகள் ஆயிரம் இருக்க, அயல் நாட்டிலேயே வளர்ந்தும் தமிழ் பெண்களையே தேடிப்பிடித்து காதலிக்கும் எம் குல ஆண்கள்.(ஒரு சிலரே).

6) உனக்குப்  பரத நாட்டியம் ஆடத் தெரியுமா?? என்று என்னைப் பார்த்துக் கேட்ட என் அலுவலக சக ஊழியர்.இதில் என்ன அசத்திபுட்டாங்கன்னு கேட்கறிங்களா??.அவர் ஒரு ஆப்பிரிக்கர்.தென் ஆப்பிரிக்காவின் மிகவும்  பின் தங்கிய குக்கிராமத்திலிருந்து வந்தவர்.சென்னையை பற்றியும் தமிழ் நாட்டைப் பற்றியும் தமிழ்கலாச்சாரத்தைப் பற்றியும் கேள்வி கேட்டே என்னைக் கொல்லுபவர்.

7) 18 வயதானால் போதும் பெற்றோரைப் பிரிந்துப்  பிள்ளைகள் தனியே வாழலாம் எனும் கலாச்சாரத்திலும் பிள்ளைகளை கைக்குள்ளேயே வைத்து வளர்த்து எங்கே செல்கிறாய்?? யாருடன் செல்கிறாய்?? என்று கேள்வி  கேட்கும்  பெற்றோர்கள்.(பிள்ளைகளை இந்திய முறைப்படி வளர்க்கும் பெற்றோர்களும் ஒரு சிலரே )


8) ஐரோப்பாவின் தட்பவெப்ப சூழலிலும்  வாழ்கை முறையிலும்  நன்றாக பழகிவிட்டாலும் "சொர்க்கமே கண்ணுல காமிச்சாலும் என் சொந்த ஊரப் போல வராது "என்று ஆண்டுக்கொரு முறை ஊரை எட்டிப் பார்த்திட ஏங்கும் உள்ளங்கள்.


9) ஆங்கில வார்த்தைக் கலக்காமல் தமிழில் ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் பேசினால் பரிசு எனும் போட்டி நடத்தும் நிலைமை உள்ளூரில் இருக்க, தமிழை பள்ளியில் கற்க வாய்பில்லாத போதும், தனியே தமிழ் பயின்று இசை முதல் கவிதை போட்டி வரை கலக்கும் மாணவர்கள்.

10) இவைகளையெல்லாம் தாண்டி பாரீஸ் நகரத்தில், நகரின் முக்கியப் பகுதியில் இயங்கும் தமிழ் கடைகளில் பெரிய தமிழ் எழுத்துக்களில்  பெயர் பலகை வைத்திருக்கும் வணிகர்கள்.வரிச்சலுகை வேண்டுமானாலும் தருகிறோம் தமிழில் பெயர் பலகை வையுங்கள் என்று எவரையும் கெஞ்ச வேண்டிய நிலைமை இல்லை.


இதில் இருந்து என்னத் தெரிகிறது என்றால், நாம் யார்? என்று நம்மில் பலருக்குத் தெரியாவிட்டாலும் நம்மவர் இல்லாத பலருக்குத் தெரிந்திருக்கிறது.


அன்புடன்,
ஆதிரா.









எனது கிறுக்கல்களையும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள் மக்களே....













Tuesday, April 2, 2013

கைப்பேசிக்கு ஒரு கண்ணீர் கடிதம்..

என் கதிரவனின் காலை வணக்கத்தை
குறுஞ்செய்தியில் கொண்டுவந்து என்

காதில் ஒலித்து என்னை கண்விழிக்க
வைத்திடுவாய் நீ..

என் ஏகாந்த இரவுகளில் இளையராஜாவின்
இசை ராஜாங்கத்துடன் எனக்கு துணை
இருந்திடுவாய் நீ..

என்னவனின் குரல் கேட்க
உன்னையே நோக்கி தவமிருக்க
சிணுங்கல் கொண்டு என்னை சிரிக்க
வைத்திடுவாய் நீ..

சத்தமில்லாத முத்தத்திலும்
சத்தம் சேர்த்து எனக்கென
சிறப்புப் பரிசாய் தந்திடுவாய் நீ..

என் சந்தோஷங்கள் முதல் சங்கடங்கள் வரை
சகலமும் தாங்கி நின்றிடுவாய் நீ...

காத்திருப்பதெல்லாம் சுகமென எனக்கு
கற்றுத் தந்தாய் நீ ...

என் காதலின் ஆணி வேராய் இருந்து
ஆரம்பித்த நாள் முதல் அச்சுமுறியாமல்
என்னை அரவணைத்தாய் நீ..

அதனாலோ என்னவோ அதிகமாய் நேசித்தேன்
உயிரெனப் பாவித்து உள்ளங்கையில் அடக்கி
ஒரு கனமும் உன்னை பிரியாமல் இருந்தேன்..

உன்னை என்னிடமிருந்து பிரிக்கத்தான்
வந்ததோ வம்பு அன்று..
வாயடித்துப் பேசுகிறேன் என வஞ்சிட்டான்
வந்ததொரு கோவம் அவன் வாய்மொழியால்..

சினம் கொண்டு செய்வதறியாது நின்றேன்..
என் வார்த்தைகளைச் சுமந்து எனக்கென
சிறம் தாழ்த்தி பல முறை நின்ற உன்னிடமே
என் சினத்தை உமிழ்ந்தேன்..

அடித்து நொறுக்கினேன் அங்கம் உதிர்ந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆனாய்..
அகந்தை அடங்கியதும் அகம் சொல்லிட்டது
அவள் உன்னுடன் இல்லை என்று..

சிதறிய உன்னை சேர்த்தெடுத்து அணைத்தேன்
சிரிப்பொலி இல்லாத உன் அமைதி சொன்னது நீ
செத்துவிட்டச் செய்தியை..

அவனுடனான ஊடல் அடுத்த நாளே முடிவுற்றது.
அங்காடி பல அலைந்து திரிந்தும் உன்னை மட்டும்
என்னால் பழையதாய் மீட்கமுடியவில்லை.

பழுது பார்த்தும் பயனில்லை
புதியதை ஏற்கவும் மனமில்லை.
புரிந்தது ஒன்று மட்டும், அர்த்தமற்ற
ஆத்திரம் அழிவைத் தானே தரும்.

அழித்திட்டேன் உன்னை இனி
அழுதென்ன இலாபம்..