Monday, February 11, 2013

கண்கள் பத்திரம்...ஐயோ சாமி!!ஒரு காண்டக்ட் லென்சுக்கு ஆசைப் பட்டு நான் பட்ட பாடு!!

நண்பர்களுக்கு வணக்கம்,

வலைப்பதிவு உலகில் எனக்கும் ஓர் இடம் கிடைத்து எழுத வந்துவிட்டேன் .எனது முதல் இடுக்கை என்பதால்,படிப்பவர் கண்ணில் படும் பிழைகளை மன்னித்தருளுங்கள்.என்  வாழ்வில் நடந்த ஒரு மறக்கமுடியாத நிகழ்வை, காலம் கற்றுதந்த பாடத்தை, சகமனிதரின் நலனில் அக்கறை கொண்டவளாய் ஒரு விழிப்புணர்வுக்காக எழுதுகிறேன்..

என் கல்லூரி நாட்கள் கல கல வென மகிழ்ச்சியாய் நகர்ந்த தருணம்   அத..நான்  புத்தக  புழுவாகவோ , இல்லை தொலைக்காட்சிப் பெட்டியின் தோழியாகவோ   இருந்ததில்லை.. இருந்தும்  என்  விழிகள் விரைவிலேயே  என் பார்வையைத் தூரமாகக் கொண்டு  சென்றுவிட்டது.

பிறகு என்ன??? மருத்துவரின்  ஆலோசனைப்படி மூக்குக் கண்ணாடி அணிந்து,  விலகிச் சென்றப் பார்வையை விரட்டி பிடித்து என் விழிகளில் அடக்கி விட்டேன் .நாம் நேசித்து ஏற்காத எந்த ஒரு பொருளும் நம்மிடம் நிலைக்காது  என்பது எத்தனை உண்மை!!. என் மூக்கு கண்ணாடியை முறைத்து முறைத்துப் பார்த்தே அதை அணிய விருப்பமில்லாமல், அறைக்குள் பூட்டிப்  பூஜை செய்தே என் பார்வைத் திறனை இன்னும் குறைத்துக்  கொண்டேன்.

ஒரு வழியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில்   தொடுவில்லை (contact lens) அணிந்து கொள்ள முடிவு செய்தேன். அதன் தொடர்சியாக ,வீட்டில்  அடம் பிடித்து, வாங்கித்தருகிறேன் என்று சம்மதமும் சொல்லிவிட்டார்கள்.மருத்துவரைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வைத்திருந்த நேரத்தில், நான் ஒரு நாள் கல்லூரிக்கு 
இரு சக்கர வண்டியில்  சென்று இருந்தேன்.

கல்லூரி இருப்பது கடற்கரை அருகில் என்பதால்  போகும் வழியெல்லாம்   பலத்த காற்றின் ஓசையும்  கடல் அலையின் மெல்லிய இசையும் கேட்டு கொண்டே இருக்கலாம்.அன்றும் அப்படியே ஒரு பலத்த காற்றில் மணல்  பறந்து வந்து கண்களில் பட்டதாய் ஓர் உணர்வு.வண்டியை நிறுத்தி, கண்களை துடைத்து விட்டு, மீண்டும் புறப்பட்டு கல்லூரி சென்று வீடு திரும்பிவிட்டேன்.

கண்களில்  இருந்த உருத்தல் மட்டும் சரியாகவில்லை.அதுவே சரியாகி விடும் என்று விட்டுவிட்டேன் .ஒரு வழியாக, மருத்துவரை பார்க்கும் நாளும் வந்தது.

காண்டக்ட் லென்ஸ் அணிய வேண்டும் என்று மருத்துவரிடம் விளக்கிய போது, என் அம்மா கண்களில் ஏதோ தூசி பட்டு உருத்துவதாய் சொல்கிறாள் என்றார். மருத்துவர் உடனே கண்களை ஒரு முறை சுத்தம் செய்து கொள், பின் லென்ஸ் அணியலாம் என்றார்.அதற்காக ஒரு சொட்டு மருந்து தருவதாகவும் சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார்.

மருந்தை வாங்கி கொண்டு வீடு திரும்பினோம்.இரவு அந்த சொட்டு மருந்தை போட்டு விட்டு உறங்கினேன்..இனிதே விடியல் வந்தது. கண்களை திறந்தேன்.கண்களில் இருந்த உருத்தல் நின்ற பாடில்லை. சரியாகும் என்று காத்திருந்தபடியே சொட்டு மருந்தை மீண்டும் 
உபயோகித்தேன்..மறுநாளும் விடிந்தது..கண்களில் மாற்றம் இல்லை மாறாக  
இன்னும் மோசமானது.அதிகப்படியான எரிச்சலை உணர்ந்தேன்..மனது மட்டும் சற்றே என்னை பயமுறுத்தியது உன் கண்களுக்கு ஏதோ ஆபத்து என்று..

வீட்டில் சொன்னால் ஒரு வரும் காதில் வாங்குவதாய்  இல்லை..காரணம் நான் ஒரு சீக்கு கோழி.அடிக்கடி நோய்வாய்ப் படுவதும் பின் அதுவே சரியாவதும் எனக்கு பழக்கமான ஒன்று..அதனால், நான் ஏதொ கல்லூரிக்கு மட்டம் போட காரணம் தேடுவதாய் நினைத்து விட்டனர் என் வீட்டார்.

இப்படியே இரண்டு  நாட்கள் நகர்ந்து விட்டது..மருத்துவர் என்னை தலைக்கு குளிக்க வேண்டாம், கண்ணில் எதுவும் படாமல் பார்த்து கொள்ளும் படி ஆலோசித்திருந்தார் ..

நான் விடுவேனா, அந்த கண் எரிச்சலிலும் அம்மா சொல்ல சொல்ல கேட்காமல் தலைக்கு குளித்துவிட்டேன்..அவ்வளவு தான்...கண்களின் எரிச்சலும் வலியும் உச்சகட்டத்தை    அடைந்தன. என்னால்  தாங்க  முடிந்த  வலியின்  அளவை தாண்டி விட்டதாலோ என்னவோ, கண்களை  திறக்கவே  முடியாமல்  கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய  ஆரம்பித்து  விட்டேன். கண்களை  மூடி  இருந்தால் மட்டுமே என்னால் இருக்க  முடிந்தது. சற்று  மிதுவாய்  கூட  திறக்க  முடியவில்லை.

என் வீட்டில்,அப்போது தான் நம்பினார்கள் எனது வலியை.என் அம்மா தூசி  தான் இன்னும் கண்ணுக்குள் இருக்கோ என்று ,இரு கண் இமைகளையும்    விரித்து  பிடித்து ஊதிவிட்டார். என் அழுகை இன்னும் பத்துமடங்க்காயிற்று.  கண்களை மூடிய படியே கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.

பொதுவாக கண்களின் தூசிக்கோ வேறு சில பிரச்சனைக்கோ தாய்ப்பால் ஊற்றினால் உடனே சரியாகும் என்பது என் அம்மாவின் நம்பிக்கை, எங்கள் தெருவில் ஒரு தாயிடம் பால் வாங்கி வந்து அதையும் செய்துவிட்டார்கள் பலனில்லை .

 எங்கள் ஊரில் அதிக கண் மருத்துவரோ,மருத்துவமனையோ இல்லை. சுத்தி சுத்தி நாங்கள் அரசு மருத்துவமனைக்கோ இல்லை அங்கு பணிபுரியும்  மருத்துவர் மாலையில்   பார்க்கும்  தனியார்  மருத்துவ கூடத்திற்கோ தான்  செல்ல  வேண்டும்.

என் அழுகையை பார்க்க முடியாத என் சகோதரன் அரசு மருத்துவமனை சென்று நாங்கள் பார்த்த அந்த மருத்துவர் இருக்கிறாரா என்று பார்த்து வந்தான்.அங்கிருந்த கூட்டத்தில் நிச்சயம் இப்போதைக்கு பார்க்க முடியாது என்று தெரிந்து வந்தான்.

ஒரு வழியாக  மறு நாள் இரவு அதே தனியார் கூடத்தில் அதே மருத்துவரை பார்த்தோம்.என் கண்கள் மூடிய படியே தான்  இருந்தன. திறந்தால் வலிக்கும் என்று நான் திறக்கவே இல்லை.மனது நிறைய கேள்விகள் வேறு, மருத்துவர் என்ன சொல்லுவாரோ??எதனால் இப்படி ஆனதோ?தலைக்கு குளித்தது  அவ்வளவு பெரிய குற்றமா? கண்கள் தெரியாமல் போயிடுமோ?அம்மாவிடம் அவர் தலைக்கு குளித்தது தான் பிரச்சனை என்று சொல்லிவிட்டால்!!!வீட்டில் எல்லாரிடமும் அடி வாங்க வேண்டி வருமே..அரண்டவன் கண்ணுக்கும் இருண்டதெல்லாம் பேய் என்ற கணக்காய் ஆகிவிட்டது.

சரி மருத்துவர் அப்படி என்ன தான் சொல்கிறார் என்று பார்ப்பதற்கு காத்திருந்தேன்.என் அம்மா வாயை திறந்து முதலில் சொல்லியது."டாக்டர் நீங்க தலைக்குலாம் குளிக்க வேண்டாம்னு தான சொன்னிங்க..இவ எங்க கேட்ட இப்ப கண் எரியுது என்கிறாள்". 

என்னால் ஒன்றும் பேச முடியவில்லை.மருத்துவர் கண்களில் ஒளி அடித்து  பரிசோதித்துவிட்டு  அதிர்ந்து  போனார்.உன் கண்கள் இரண்டும் கொத கொத வென புண் ஆகி வெந்து போய் இருக்கிறது.நீ ஏன் தலைக்கு குளித்தாய் என்று கேட்டு கொண்டே இருக்கையில், என் அம்மா அவர் கொடுத்த மருந்து சீட்டையும், சொட்டு மருந்தையும் எடுத்து மேசை மீது வைத்தார்.

மருந்தை பார்த்து மீண்டும் அதிர்ந்தார்,மருந்தை கையில் எடுத்து இதையா கண்களுக்கு போட்டீர்கள் என்று எங்களை பார்த்து கேட்கிறார்.அட கடவுளே!!!என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டேன்.அந்த கிளினிக் யை சேர்ந்த மருந்து கடையில் தான்  மருந்து வாங்கினோம் என்பதால் கடையில் இருந்தவரை அழைத்து உங்கள் விருப்பத்திற்கு மருந்து கொடுக்க, நான் ஏன் இங்கு மருத்துவன் என்று ஒருவன் இருக்கிறேன் என்று மட்டும் கேட்டு அனுப்பிவிட்டார்.பின், எனக்கு மாற்று மருந்துகள் எழுதி கொடுத்தார்.

கண்களுக்கு கொஞ்சமும் ஒப்பாத மருந்தை (high dose) போட்டதால் கண்கள் புண்ணாகி இருக்கிறது,வெந்த புண்ணில் வேதியல் கலவை(ஷாம்பூ) பட்டவுடன் இன்னும் அதிகமாய் புண்ணாகி அப்படி ஒரு வலி வந்திருக்கிறது.

இம்முறையும் நாங்கள் மாற்று மருந்தை அதே கடையில் தான் வாங்கினோம்.வேறு கடைக்கு செல்ல வேண்டும் என்று எங்களுக்கு தோனவும்  இல்லை.நாங்கள் அவர்களிடம் எதிர்பார்த்தது  "தெரியாமல் நடந்து விட்டது" என்ற  ஒரு  கண்ணிய  வார்த்தையை  தான். அதற்கு  கூட  மனமில்லாமல்  இறுகிய   முகத்துடனே மருந்தை தந்தனர்.

மாற்று மருந்து போட்டு ஓரிரு நாட்களில் என் கண்கள் பழைய நிலையை அடைந்து,நான் கல்லூரி சென்றேன்.நிகழ்வு நிறைவுக்கு வந்தது.


 இதில் இருந்து நான் கற்ற முதல்  பாடம். பார்வை எவ்வளவு அவசியம் என்பதும் ,பார்வை அற்றவரின் வேதனை என்னவாக இருக்கும் என்பதும்.
இதை விட பெரிய பாடம், நாம் செய்யும் சிறு அலட்சியமோ,நாம் சொல்லும் சிறு வார்த்தையோ, நமக்கு வரும் சிறு கோவமோ,நாம் எடுக்கும் சிறு முடிவோ, எல்லாம் எத்தனை சின்னதாக இருந்தாலும், அவை சக மனிதரின் வாழ்வில் ஒரு நொடியேனும் இன்னலைத் தருமெனில், நாம் செய்யும் பாவங்களில் பெரிய பாவம் அதுவே ஆகும்.

அன்று மட்டும் மருந்து இல்லை நாளை வாருங்கள், இந்த மருந்து இல்லை வேற தரட்டுமா, வேறு கடையில் கேட்டு பாருங்கள் என்று ஏதேனும் ஒரு பொறுப்பான பதிலை கடைக்காரர் சொல்லி இருந்தால் அப்படி ஒரு அவஸ்தை இல்லை எனக்கு.எதை கொடுத்தால் என்ன? இவர்களுக்கு தெரியவாப் போகிறது.நியாயம் தான் எனக்கு என்ன மருந்துசீட்டை பார்த்து அதில் இருக்கும் மருந்தை தான் கொடுத்தாரா என்று தெரியவாப் போகிறது.

ஆனாலும் எனக்கு ஒன்று மட்டும் தெரியும், மண்ணில் நடக்கும் பல    விஷயங்கள்  மனித மனங்களின்  மேல்  கொண்ட நம்பிக்கையில் 
தான் நடக்கிறது.. இது ஏனோ அவருக்கு தெரியவில்லை.

நான்கு வருடங்கள் கழித்து இதை இன்று எழுதுவதற்கான காரணம், இன்னும் இது போன்ற நிகழ்வுகள் எங்கேனும் ஒரு மூலையில்  நடந்து கொண்டே தான் இருக்கின்றன.பாதிப்புகள் சிறிதாகவோ பெரிதாகவோ இருந்து கொண்டே தான் இருக்கின்றன.கவனமாய் இருங்கள்,சின்ன மாத்திரை வாங்கும் விசயமாக இருந்தாலும்...

நேரம் எடுத்து இதனை படித்தவர்க்கும் பகிர்ந்தவருக்கும்  என் நன்றிகள்.

பணிவுடன்,

ஆதிரா 



7 comments:

  1. //எனது முதல் இடுக்கை என்பதால்//

    அப்டியா ..?!
    வரவேணும் ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவிற்கு நன்றி ஐயா..

      Delete
  2. மண்ணில் நடக்கும் பல விஷயங்கள் மனித மனங்களின் மேல் கொண்ட நம்பிக்கையில்
    தான் நடக்கிறது.. இது ஏனோ அவருக்கு தெரியவில்லை.//

    எத்தனை சிரமத்துக்கு காரணமாகிவிட்டார் ..


    ReplyDelete
    Replies
    1. தங்களின் வரவிற்கும் இந்த பக்கத்தில் இணைந்தமைக்கும் எனது நன்றிகள் சகோதரி..

      Delete
  3. உண்மை தான் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எங்கும் எதிலும் கவனம் தேவை தான் முதல் பகிர்வானாலும் சிறந்த சிந்திக்க வைக்கும் பகிர்வு.

    ReplyDelete
  4. முதல் பதிவா....?? ஆச்சரியமாக உள்ளதே...10-2-13.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete