Monday, March 25, 2013

இவைகளெல்லாம் இந்தியாவில் மட்டுமேச் சாத்தியம்..


  
1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.

2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமேத்  தெரியும்.

3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத்  தெரியாது.

4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.

5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.

6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.

7) வேட்டிக்  கட்டுனவங்க படிக்காதவங்க.

8) கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண்.

9) பொறியியலும் மருத்துவமும்  படிப்பவன் மேதை.

10) ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
அதேபானியில் படம் எடுப்பது.

11) பெத்தவன் பிறந்த நாள் தெரியாதவன் தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.

12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே  பேருந்து செல்வது .

13) ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே ஒரே நேரத்தில் இரயில் வந்து மோதுவது.

14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV Channel ஆரம்பிப்பது.

16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

17) நகைக் கடைகளுக்கு  நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.

18) இடுப்பு வலி வராத புள்ளத்தாச்சுக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.

19) பரிட்சை எழுதாதவனுக்கு " பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.

20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

21) Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ  இல்லையோ  pizza வந்திடும்.

22) இலவசமா கிடைக்கற அரிசி புழுவோட இருக்கும்.இலவசமா கிடைக்கற sim card  credit (balance) oh da இருக்கும்.

23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

இன்னும் நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு.நான் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

-ஆதிரா. 


Saturday, March 23, 2013

இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் நான் சாட்சிகள் என்கிறேன்..

மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் 
மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு..

நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் 
நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்...

கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் 
கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்...

நீ இன்னொருவனின் இல்லாள் என்று...

கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் 
காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??

குதிகால் செருப்பில் காலை அலங்கரிக்க மறக்காத நீ 
கால் விரலின் மிஞ்சியை மறந்ததேனோ??

தலைவிரி கோலமே நாகரீகமெனும் தத்துவத்தை விரும்பும் நீ 
தலை வகுட்டில் வைக்கும் குங்குமத்தை விரும்பாததேனோ??

இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் 
நான் சாட்சிகள் என்கிறேன்..

உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க..
எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க..
மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..

In the name of modernity, dont ignore our valueable culture and Tradition!
அம்மா அழைத்தால் மட்டும் நமக்கு அப்படி ஒரு அலட்சியம்!!!!
வீட்டுக் குக்கரின் விசில் சத்தத்திற்கு 
விரைந்துச் செவிச் சாய்ப்பாள்...


வீதியில் செல்லும் வழிப்போக்கன் 
வாய்மொழிக்கும் பட்டனெச் செவிச் சாய்ப்பாள் ..


தொலைவில் அழைக்கும் தொலைப்பேசியைத் 
தேடித் தொடர்ந்துச் செவிச் சாய்ப்பாள்..


படபடவெனச் சரிந்து விழும் பாத்திர ஒலிக்கும் 
பக்குவமாய் செவிச் சாய்ப்பாள்..


நிறைந்து வழியும் தண்ணீர் தாளத்திற்கும் 
தவிப்போடு செவிச் சாய்ப்பாள்..


வண்டிச் சாவியைத் தேடும் மகனின் குரலுக்கும் 
வடிவாய் செவிச் சாய்ப்பாள்..


தேநீர் தேடும் கணவனின் கட்டளைக்கும் 
தெவிட்டாமல் செவிச் சாய்ப்பாள்..


புத்தகம் எங்கே எனும் மகளின் புலம்பலுக்கும் 
புன்னகையுடன் செவிச் சாய்ப்பாள்..


நித்தம் நித்தம் எல்லோர் அழைப்பிற்கும் செவிச் சாய்த்து 
நிறைவாய் சேவைச் செய்வாள்..


இவளின் அழைப்பிற்கு மட்டும் ,
"இதோ வருகிறேன்" என எப்போதும் பதில் கிடைப்பதில்லை ..
"இரும்மா வருகிறேன் " என்று மட்டுமே கிடைக்கும்...

Saturday, March 16, 2013

ஆண்களே உஷார்..!திருமணச் சந்தையில் பெண்களின் எதிர்பார்ப்பு பொறியாளர்களே!

    
 
 
 
 நீங்கள் பொறியியல் துறையில் வேலை செய்பவரா? , பொறியியல் படித்துக் கொண்டிருபவரா?, அடிக்கடி வெளிநாடு (onsite ) செல்பவரா?. அப்ப,கவலைய விடுங்கண்ணா உங்களுக்கு கல்யாணம்  ஆகலைனா  கல்யாணத்துக்கு  பொண்ணு ரெடி..
 
எனது இந்த இடுக்கையின் நோக்கம் இன்றைய திருமணச் சந்தையில்(சந்தை என்று எழுத என் விரலுக்கு விருப்பமில்லை,எனினும் சந்தையாகிவிட்ட ஒன்றை அப்படி தான் எழுதியாக வேண்டும் ) பெண்களும், பெண்  வீட்டாரும்  அதிகம் விரும்புவது பொறியியல் படித்த ஆண்களைத் தான் என்பதை எடுத்துரைப்பதே.வீட்டில் பார்த்து முடிக்கும் திருமணத்தை பற்றி மட்டுமே பேசி இருக்கிறேன்.காதல் திருமணத்தை அல்ல.
 
ஊருக்கு ஒரு பொறியாளர் இருந்த காலம் போய் , இன்று தடுக்கி விழுந்தால்  தெருவுக்கு பத்து பொறியாளர் என்று பொறியியல் மீதான  மோகம் பெருகி  விட்டது மக்களிடையே.ஐந்து லட்சம் கொடுத்தேனும் தன்  பையன பொறியியல் கல்லூரியில் சேர்த்திடனும்னு நினைக்கிற பெற்றவர்கள்   ஒரு பக்கம் னா,  பத்து லட்சம் கொடுத்தேனும் தன்  பெண்ணை  ஒரு பொறியாளருக்கு கட்டி வச்சிரணும்னு நினைக்கற பெற்றவர்கள்  இன்னொருப் பக்கம்.
 
பல இடங்களில் பெண்கள் எதிர்பார்கிறார்கள்,     சில இடங்களில் பெண் வீட்டாரும் சேர்ந்து இதையே எதிர் பார்க்கிறார்கள்.
 
அப்படி என்ன தான் இவங்க எதிர்பார்ப்பு..
 
1) பையன் BE படிச்சிருக்கணும்.(அதை படிச்சு முடிச்சானாங்றது வேற விஷயம்.) இந்த BA MA Bsc Msc BEd MEd படித்தவர்கலெல்லாம் எங்க போய் பொண்ணு தேடுவதென்று  தெரியவில்லை.பொறியியல் தவிர வேற எதுவும் பல பேர் கண்ணுக்கு படிப்பாவே தெரிவதில்லை.அப்படி என்ன தான் இருக்கோ என்னால கண்டு பிடிக்க முடியவில்லை .
 
2) பையன் software ல இருந்து அடிக்கடி வெளி நாடு சென்று வந்தால் கேட்டதையெல்லாம் கொடுத்து திருமணம் செய்யவும் தயராக இருக்கின்றனர் சில பெற்றோர்.அது சரி, வாங்கறதுக்கு சில ஆண்களும் தயாராகத் தானே இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஆசிரியரை திருமணம் செய்தால் அதிக விடுமுறை கிடைக்கும் என்று இருந்தவர்கள் இன்று பொறியாளரைத் திருமணம் செய்தால் தான் பெருமை என்று நினைக்கின்றனர்.
 
3)  ஒரே பையனா இருந்துட்டா இன்னும் வசதி.ஆறடி கூந்தலையே வேலைக்கு போனதும் maintain பண்ண முடியலன்னு அரை அடிக்கு வெட்டிறாங்க. அவங்களால எப்படிங்க கூட்டு குடும்பத்த maintain பண்ண முடியும்??அதான் பெத்தவங்க பாத்து பாத்து ஒரே பையன் இருக்க வீடா தேடறாங்க.
 
4)  சில ஆண்கள் தான்  social drinker என்று சொல்வதையே பெருமையாக்கி விட்டார்கள் என்றால்,பெண்களும் அதற்கு ஈடு கொடுத்து social drinker ,social smoker என்றால் it doesn't a matter ma என்கிறார்கள்.(ஒரு மனிதனின் பழக்க வழக்கம் வேறு , பண்பு என்பது வேறு.இரண்டையும் நான் குழப்பிக் கொள்வதில்லை.இவர்கள் சொல்வதெல்லாம் பெருமைக்கு செய்யும் பழக்க வழக்கங்கள்)
 
5) பையன்கிட்ட  கார் இருக்கா?, பைக் இருக்கா? இதையெல்லாம்  இன்று  அதிகம் கேட்பதில்லை. இல்லை என்றால்  தான்  இவர்களே  வாங்கித்  தருகிறார்களே . இன்றைய தினம், இவங்க கூப்பிடற இடத்துகெல்லாம்   வர பையன் தயாரா இருக்கணும் .அதான் மிக முக்கியம்.அப்பதானே மூட்டைய கட்டிட்டு எப்பவேணா தனி குடித்தனம் கிளம்ப வசதியா இருக்கும்.
 
திருமண பந்தத்தில் உள்ளத்திற்கும் தனி மனித ஒழுக்கத்திற்கும் இருக்கும் மதிப்பை விட ஏனைய விடயங்களுக்கு மதிப்பு தருவது மனதை வருத்துது.
 
பெற்றதைக் கொண்டு பெருமை தேடிக் கொள்வதே கல்வியே தவிர பெருமைக்காக தேடித் பெறுவதல்ல.பெருமைக்காக பொறியியலைத் தேடித் படிக்காதீர்.அதே பெருமைக்காக பொறியாளரைத் தேடி திருமணம் செய்யாதீர்.
 
மனங்கள் இரண்டு இணைவதே திருமணமே தவிர 
மான்யங்கள் கொண்டு மனதை விலை பேசுவதல்ல.
 
வாழ்க்கை வளம் பெற வேண்டுமெனில்,பண்பின் அடிப்பையில் மட்டுமே உங்கள் வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுங்கள்.
 
"மனைத்தக்க  மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான் 
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை."
 
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்கு தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.
 
 தன் வீட்டில் தங்கை திருமணத்திற்கு காத்திருக்க எதிர் வீட்டில் இருப்பது என் தேவதை என இழுத்து கொண்டுபோய் திருமணம் செய்யும்,சுயநல இளைஞர்கள் இருக்கும் இதே  உலகில் தான் ,தனக்கு வயது ஆனாலும் பரவாயில்லை பெற்றோர் பார்த்துச் சொல்லட்டும் என காத்திருக்கும் இளைஞர்களும் இருகின்றனர்.
 
அவர்களின் உயர்ந்த உள்ளத்தை புரிந்துக் கொள்ளத் தான் பெண்களுக்கோ, பெண் வீட்டாருக்கோ தெரிவதில்லை.
 
 
அன்புடன்,
ஆதிரா 
 
 
 
 
 
 
 
 

Wednesday, March 13, 2013

எங்கே இருக்கிறது?? உங்களின் வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இந்தியா, என் கண்ணில் கொஞ்சம் காட்டுங்கள்.
நீண்ட காலமாக ஒரு கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்.அதை தேடித் தான் இந்த இடுக்கை.

நான் பள்ளியில் படிக்கையில் சமூக அறிவியல் என்றொரு பாடம் உண்டு.உலக மற்றும் இந்திய வரலாற்றை முன்னிறுத்தி சொல்லித் தரப்படும் அந்த பாடத்தில் நான் கற்றதே "வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நம்  இந்திய பாரத நாடு".

இதன் பொருளை நான் நடைமுறை வாழ்வில் உண்மையில் உணர்ந்து விட்டேனா?? என்பதே என் கேள்வி.

அடிப்படையில், மொழியால் இனத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்ட நாம் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபடுவோம் என்பதே இதன் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே .

இப்போது இந்த நிலையில் தான் இந்தியா இருக்கிறதா??.உடனே அரக்கோணத்தில் இருப்பவன் அரியானாவில் புயல் என்றால் நிவாரண நிதி அனுப்புகிறான்,நெய்காரன் பட்டியில் பிறந்தவன் நாயர் கடையில் சாயா குடிக்கிறான், அங்கு இருக்கிறது "வேற்றுமையில் ஒற்றுமை" என்று பதில் சொல்லி விடாதீர்.

இவைகளைத் தாண்டிய பதிலைத்  தேடுகிறேன் நான்.பக்கத்து வீட்டில் இருக்கும் வடக்கத்தியானுடன்  ஒற்றுமையாக இருக்கிறேன் என்கிறீரா உண்மை தான். அவரிடம் நீங்கள் வெளிநடப்பை பேசாத வரையில்.மாநில, அரசியல் மற்றும் மதப் பிரச்சனைகளைப் பேசிப் பாருங்கள் ஒரு நிமிடத்தில் உங்களை தமிழனாக்கி அவர் மட்டும் இந்தியனாய் இருப்பார்.

அப்படியே நம்மிடம் அந்த உணர்வு இருக்கிறது என்று ஒப்புக் கொண்டாலும் நம்மை சுற்றி இருப்பவரிடமும்  இருக்கிறதா??தமிழ் பத்திரிக்கைகளே இன்று வரையில் தமிழக மீனவன் இலங்கை அரசால் சுட்டுக் கொலை என்று தானே எழுதுகிறார்கள்.அதே கேரள மீனவன் இத்தாலி மாலுமிகளால் சுட்டுக் கொல்லப் பட்டபோது இந்திய மீனவன் என்றே எழுதினர்.

இதை விடக் கொடுமை, 

பிரான்சில் நுழைந்த நாள் முதல் இன்று வரையில் இன வேற்றுமை என்ற ஒன்றை நான் உணர்ந்ததே இல்லை.பாகிஸ்தான்,பங்களாதேஷ்,நேபால் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்தும், போர்ச்சுக்கல், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் இருந்தும் கோங்கோ,மரோக் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் வரையில் அனைத்து வகை மக்களும் இருக்கின்றர் இங்கு.எனது பாகிஸ்தான் நண்பர்கள் கூட என்னை இந்தியனாகவேப்  பார்க்கின்றனர் .

கிகிகிரகம், இந்த வட இந்தியனின் பார்வை மட்டும் ஏனோ, இந்தியா அவனுக்கு மட்டுமே சொந்தமானது போலும் நான் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து குதித்தவள் போலும்  ஏளனப் பார்வை பார்க்கிறான்.

பிரெஞ்சுக் காரனும், பாகிஸ்தான் காரனும் கூட என்னைப் பார்த்து இந்தியனா என்று கேட்கிறான், இந்த வடக்கத்தியானுக்கு வந்த வாழ்வு என்னை பார்த்து தென் இந்தியனா என்று கேட்காவிட்டாலும் பரவாயில்லை மெத்ராசி யா என்கிறான்.

ஐந்து விரல்களும் ஒன்றில்லை என்பதை ஆணித்தனமாக நம்புவள் நான்.ஆகையால் அனைவரையும் குறிப்படவில்லை.எனது கல்லூரிக் காலத்தில் எனக்கு வட இந்திய நண்பர்கள் ஏராளம்.இன்று வரையில் சர்தாஜி நகைச்சுவைகளை ரசிக்கதாவள் நான்.அவர்களை சிங்  என்றுக் கூட அழைத்தில்லை.இந்தியர்களாகவே பார்க்கிறேன் அதையே அவர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.ஆனால் , வட இந்தியர் பலரின் மனதில் நாம்  தமிழர்களாய் மட்டுமே இருக்கிறோம்,இந்தியர்களாக அல்ல என்பதே என் வருத்தம்.

ஒருவேளை அவர்கள் பாடத்திட்டத்தில் இந்தப் பாடம் வைக்கப் படவில்லையோ??அதுசரி,பாடத் திட்டத்திலும் வேற்றுமை தானே!! நமக்கு எப்பவும் அசோகர் மரம் நட்ட கதை மட்டும்  தான்.அவிங்க மட்டும் ஒன்பதாம் வகுப்பிலே மின்னியலை படுச்சி புடுவாய்ங்க.. 

தமிழ் நாட்டில் தான் இன்று வரையில் சாதி பிரச்சனைக்கு  ஓர் நிரந்தரத் தீர்வு இல்லை என்றால்,அதைக் கடந்து தமிழன் இந்தியனாக அனைவராலும் உணரப் படுகிறானா என்றால் அதுவும் இல்லை அங்கேயும் பிரச்சனைத் தான்.விடை தெரியாக்  கேள்வியுடன்,

ஆதிரா.
Saturday, March 9, 2013

தோழிகளே வாருங்கள்..இவற்றில் எதையேனும் நீங்கள் செய்ததுண்டா என்று கூறுங்கள் ???


 வீட்டில் கிடைக்கும் உடைந்த பொருட்களை எல்லாம் தேடி சொப்பு சாமான் சேர்த்ததுண்டா??

குழம்பு வைக்க மிளகாய்த்தூள் வேண்டுமென செங்கல்லை விரல் தேயத் தேய்த்து செங்காமட்டை அரைத்ததுண்டா??

மண்ணில் கேக் செய்து தோழி பிறந்தநாளை கொண்டடியதுண்டா??

வளையல் ஜோடி சேர்க்கும் விளையாட்டிற்காக உடையாத வளையலையும் உடைத்து வளையல் துண்டுகள் சேர்த்ததுண்டா??

திருவிழாக் கடையில் பலூனுக்காகவும் பஞ்சுமிட்டாய்க்காகவும்  அடம் பிடித்ததுண்டா??

சில்லுக் கோடு ,செதுக்கு,நொண்டி, நாடு பிடித்தல், போன்ற விளையாட்டுக்களை குதித்து குதித்து ஆடுகையில் என் கொலுசு சத்தம் போட வேண்டும், இப்பவே கொலுசு போட்டு விடுடி னு அம்மாவை படுத்தியதுண்டா??

நாம் ஆடிய விளையாட்டெல்லாம் போதாதென பசங்க விளையாடும் பச்சை குதிரை, கில்லி,கிர்க்கெட் பக்கம் சென்று "டேய் என்னையும் சேத்துக்குங்க டானு " கேட்டு அவமானபட்டதுண்டா??

நிலவு வந்த நேரத்தில் அப்பாவின்  வரவிற்காக காத்திருந்த அம்மாவின் சேலையில் ஒளிந்து கொண்டு  அப்பாவின் கைகளையே பார்த்ததுண்டா ??

அம்மாவின் நெற்றிமேல் இருக்கும் பொட்டை பார்த்து நீ மட்டும் அங்க வச்சிருக்க எனக்கு மட்டும் ஒரு பொட்டு தானா ? என்று வினவியதுண்டா??

கொடியில் காயும் துண்டை எடுத்து தாவணிப் போட்டு கண்ணாடி முன் நின்றதுண்டா ??

அம்மாவிடம் தலை வாருகையில் அடிக்கடி தலையைத் திருப்பி கொட்டு வாங்கியதுண்டா ??

மழைக் காலத்தில் சிவனேன்னு செடியில் அமர்ந்திருந்த தட்டான (தும்பி) புடிச்சி ஏதோ ஓடி ஓடி பாட்டாம் பூச்சிய புடிச்ச மாறி "ஏய் புடிச்சுடண்டி புடிச்சுடண்டி னு " கத்தியதுண்டா ??

பத்து பைசா அம்மாட்ட வாங்கி பெட்டிக் கடையைத் தேடி தேன் மிட்டாய் தேங்காய் மிட்டாய் குடல் வத்தல் என ருசித்ததுண்டா??

பள்ளிக் கூட வாசலில் இலந்த வத்தல் ,மாங்காய் என வாங்கி நொறுக்கி கொண்டே வீடு போய் சேர்ந்ததுண்டா ??

பள்ளி முடிந்ததும் விளையாடிவிட்டு கால தாமதமாய் வீடு செல்ல , உங்க அம்மா உங்களை வெளுத்து வாங்கியதுண்டா??

அக்காவ பாரு அவ எப்படி இருக்கா, நீயும் தான் இருக்கியேன்னு அட்வைஸ் வாங்கியதுண்டா??

டிக் டிக் யாரது ? தேவதை?என்ன வேண்டும்? கலர் வேண்டும் என்ன கலர் ??

பூ பறிக்க வருகிறோம்..பூ பறிக்க வருகிறோம் எந்த பூவை பறிக்கனும் எந்த பூவை பறிக்கனும்?

ஒரு குடம் தண்ணி ஊத்த ஒரு பூ பூத்துச்சாம்.இரண்டு குடம் தண்ணி ஊத்த இரண்டு பூ பூத்துச்சாம்..

இந்த பாட்டுகளை பாடி விளையாடியதுண்டா??

கல்லூரி படிக்கும் அண்ணாவையோ அக்காவையோ பாத்தா "நீங்க பதிமூனாவது தான படிக்கிறிங்கனு கேட்டதுண்டா??

ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய்னு குட்டி சைக்கிள் வாடகைக்கு எடுத்து நீங்களே சைக்கிள் பழகியதுண்டா??

காயம் படாம சைக்கிள் கத்துக்க முடியாதுன்னு சொன்னவன் கிட்ட "அதெல்லாம் நாங்க கத்துபோம்னு " சவுண்ட் விட்டு அடுத்த நாளே விழுந்து வாரியதுண்டா??

கருப்பு வெள்ளை தொலைக் காட்சியை வெறிக்க பாத்து "இதுல எப்படி மனுசங்க தெரியறாங்க,ஒருவேல  பெட்டிய உடைச்சு பாத்தா உள்ள இருப்பாங்களோன்னு "விஞ்ஞானி போல் யோசித்ததுண்டா??

காலையில் எழும்பையில் ரேடியோவின் கோபால் பல்பொடி விளம்பரத்துடன் எழுந்ததுண்டா??

அப்பாவின் சட்டை போட்டு பார்த்ததுண்டா??

ஒரே ஒரு மஞ்சைப் பையில் உங்கள் பள்ளிக் கூட புத்தகங்கள் அடங்கியதுண்டா ??

சாமி கும்பிடு னு அம்மா சொன்னா  கண்ண மூடர மாறி மூடிட்டு ஒத்த கண்ண தொறந்து எல்லாரும் என்னா பண்றாங்கன்னு நோட்டம் விட்டதுண்டா??

ஞாயிற்று கிழமை மட்டுமே கிடைக்கும் கறி சோற்றிற்காக காத்திருந்ததுண்டா??

அம்மாவின் பெரம்படியில் இருந்து தப்பிக்க சுற்றலான பாவாடை அணிந்து,விழாத அடிக்கு விழுந்தது போல் நடித்ததுண்டா ??

வானூர்திக்கு  (flight ) டாட்டா காட்டி அதை பறவை போல் ரசித்ததுண்டா ??
.
.
.
.
.
.
.

நினைவுகள் நெஞ்சைக் கிள்ளி இன்னும் எழுதடி எழுதடி என்கிறது.தங்கள் நேரத்தை கணக்கில் கொண்டு நிறுத்திக் கொள்கிறேன்.

கடைசியாய் ஒன்று..

பூப்படைந்த ஒரே நாளில் உங்கள் உலகம் பூட்டப் பட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்து(அதற்கு மேல் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருக்கும்)  வெறும் பல்லாங்குழியும், கல்லாங்காயும் தாயமும் மட்டும் ஆடியதுண்டா?? 

இவற்றில் ஏதேனும் சிலவற்றை செய்திருந்தால் நீங்கள் 80க்கு முன்னே பிறந்திருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் செய்திருந்தால் நீங்கள் 80களில் பிறந்திருக்க வேண்டும் 

இவற்றில் எதையுமே செய்யவில்லையெனில் நீங்கள் 90க்கு பின் பிறந்திருக்க வேண்டும்.
Friday, March 8, 2013

பல மெய்களும் சிலப் பொய்களும்..எனது கிறுக்கல்கள் கொஞ்சம் புடிச்சிருந்தா கருத்துரையிடுங்க..ரொம்ப புடிச்சிருந்தா பரிந்துரையிடுங்க...

நன்றி 
-ஆதிரா 

Sunday, March 3, 2013

இயற்கையிடம் பாடம் படி இலக்கு என்பது என்னவென்று ???


தீ சுடும் எனத் தெரிந்தும் 
சுற்றுவதை நிறுத்துவதில்லை 
விட்டில்பூச்சி..


வானத்தை தொட முடியாதெனத் 
தெரிந்தும் உயரப் பறப்பதை 
நிறுத்துவதில்லை பறவைகள்..


மழை நின்ற சிலமணி நேரம் 
மட்டுமே வாழ்க்கை எனத் தெரிந்தும் 
வருவதை நிறுத்துவதில்லை வானவில்..


இறுதி வரை இணையவே 
முடியாதெனத் தெரிந்தும் 
இடைவெளியோடு ஓடுவதை 
நிறுத்துவதில்லை தண்டவாளம்...


மாலை வந்ததும் மடியப் போகிறோம்
எனத் தெரிந்தும் புன்னகைப்பதை 
நிறுத்துவதில்லை  பூக்கள்...


இருப்பதையெல்லாம் இழந்துவிட்டப்  
பின்னரும் அடுப்பெரிக்க சுள்ளியைக்  
கொடுப்பதை நிறுத்துவதில்லை 
பட்டை பரம்..


தன்னை எத்தனை முறை 
வெட்டிக் கூறுப் போட்டாலும் 
வெயிலுக்கு நிழல் தருவதை 
நிறுத்துவதில்லை மரங்கள் 


மழை மண்ணை முத்தமிட 
மனிதன் உதவாவிட்டாலும் 
மனிதனுக்கு உதவுவதை 
நிறுத்துவதில்லை மழை 

இயற்கையிடம் பாடம் படி 
இலக்கு என்பது என்னவென்று?

இறுதி வரைப் போராடு..
எதிர் வரும் எதையும்
எளிதில் சமாளிக்க,
ஏமாற்றங்களை ஏற்கக் 
கற்றுக்கொள்..

வலிமை கொண்ட நெஞ்சத்தை பார்த்தால் 
வருத்தங்கள் எல்லாம் வந்த வழியேத் 
திரும்பிவிடும்.. 

Saturday, March 2, 2013

இளைஞர்களே இளைஞிகளே எது நாகரீகம்??தெரிஞ்சுக்குங்க..புரிஞ்சுக்குங்க...

கொண்டுவந்த  அழகு எல்லாம் 
கொண்டவனுக்கு மட்டும்னு தெரிஞ்சுக்க.. 


இறுக்கிப்  பிடித்த  உடையில் ஒரு 
இன்பமில்லை புரிஞ்சுக்க..


உள்ளாடை வெளியேத்  தெரிவது 
வெட்கமுன்னு தெரிஞ்சுக்க..

அவிழ்ந்து  விழும் கால்சட்டையில் ஒரு 
அழகுமில்லை புரிஞ்சுக்க..

பாதம் பார்த்து நடப்பதொரு 
பாவமில்லை தெரிஞ்சுக்க..

நீ நிமிர்ந்து நடக்கும் நடையில் ஒரு 
நேர்மையில்லை புரிஞ்சுக்க..

பிடல் கேஸ்ட்ரோ பேசும் முன்னே உன்னைப்  
பெத்தவனைத் தெரிஞ்சுக்க..

நீ பெத்தெடுக்கும் பிள்ளை வந்து உன்னைப் 
பேசும் புரிஞ்சுக்க..

காதலுக்கு மட்டும் தான் நீ 
கருச் சுமக்கனும் தெரிஞ்சுக்க..

காமத்துக்கு என்றும் நீ ஒரு 
கருவியல்ல புரிஞ்சுக்க..

உள்ளம் என்பதை உள்ளங்கையின் 
உள்ளடக்கத் தெரிஞ்சுக்க..

உணர்ச்சிப் பசிக்கு உண்ணும் உணவு 
உபதை தரும் புரிஞ்சுக்க..

பட்டப் படிப்பு படிப்பது மட்டும் 
பகுத்தறிவல்ல தெரிஞ்சுக்க..

படிக்காதவன் உன்னை விடப் 
பாசக் காரன் புரிஞ்சுக்க..

கடிவாளமென்பது மனசுக்கு மட்டும் 
மனசாட்சிக்கல்ல தெரிஞ்சுக்க..

தனம் பெற்றுத்  தாரம் பெறுவது 
தன்மானமில்லை  புரிஞ்சுக்க...

கடற்கரையில் கட்டிலுடுவது 
காதலல்ல தெரிஞ்சுக்க...

காத்திருந்த காதல் மட்டுமே 
கரைச் சேரும் புரிஞ்சுக்க..

நிலவை மட்டும் ரசிந்திருந்தா ஒரு 
நிம்மதியில்லை தெரிஞ்சுக்க..

நிலாச்சோறு ஊட்டியவளையும் 
நெஞ்சுலவைக்கணும் புரிஞ்சுக்க..

நாகரீகம் என்பதென்ன??அதை முதலில்  தெரிஞ்சுக்க..
நீ செய்யும் செயலுக்கெல்லாம் அதுப்  பெயரல்ல 
புரிஞ்சுக்க...