Wednesday, March 13, 2013

எங்கே இருக்கிறது?? உங்களின் வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இந்தியா, என் கண்ணில் கொஞ்சம் காட்டுங்கள்.




நீண்ட காலமாக ஒரு கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்.அதை தேடித் தான் இந்த இடுக்கை.

நான் பள்ளியில் படிக்கையில் சமூக அறிவியல் என்றொரு பாடம் உண்டு.உலக மற்றும் இந்திய வரலாற்றை முன்னிறுத்தி சொல்லித் தரப்படும் அந்த பாடத்தில் நான் கற்றதே "வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நம்  இந்திய பாரத நாடு".

இதன் பொருளை நான் நடைமுறை வாழ்வில் உண்மையில் உணர்ந்து விட்டேனா?? என்பதே என் கேள்வி.

அடிப்படையில், மொழியால் இனத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்ட நாம் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபடுவோம் என்பதே இதன் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே .

இப்போது இந்த நிலையில் தான் இந்தியா இருக்கிறதா??.உடனே அரக்கோணத்தில் இருப்பவன் அரியானாவில் புயல் என்றால் நிவாரண நிதி அனுப்புகிறான்,நெய்காரன் பட்டியில் பிறந்தவன் நாயர் கடையில் சாயா குடிக்கிறான், அங்கு இருக்கிறது "வேற்றுமையில் ஒற்றுமை" என்று பதில் சொல்லி விடாதீர்.

இவைகளைத் தாண்டிய பதிலைத்  தேடுகிறேன் நான்.பக்கத்து வீட்டில் இருக்கும் வடக்கத்தியானுடன்  ஒற்றுமையாக இருக்கிறேன் என்கிறீரா உண்மை தான். அவரிடம் நீங்கள் வெளிநடப்பை பேசாத வரையில்.மாநில, அரசியல் மற்றும் மதப் பிரச்சனைகளைப் பேசிப் பாருங்கள் ஒரு நிமிடத்தில் உங்களை தமிழனாக்கி அவர் மட்டும் இந்தியனாய் இருப்பார்.

அப்படியே நம்மிடம் அந்த உணர்வு இருக்கிறது என்று ஒப்புக் கொண்டாலும் நம்மை சுற்றி இருப்பவரிடமும்  இருக்கிறதா??தமிழ் பத்திரிக்கைகளே இன்று வரையில் தமிழக மீனவன் இலங்கை அரசால் சுட்டுக் கொலை என்று தானே எழுதுகிறார்கள்.அதே கேரள மீனவன் இத்தாலி மாலுமிகளால் சுட்டுக் கொல்லப் பட்டபோது இந்திய மீனவன் என்றே எழுதினர்.

இதை விடக் கொடுமை, 

பிரான்சில் நுழைந்த நாள் முதல் இன்று வரையில் இன வேற்றுமை என்ற ஒன்றை நான் உணர்ந்ததே இல்லை.பாகிஸ்தான்,பங்களாதேஷ்,நேபால் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்தும், போர்ச்சுக்கல், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் இருந்தும் கோங்கோ,மரோக் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் வரையில் அனைத்து வகை மக்களும் இருக்கின்றர் இங்கு.எனது பாகிஸ்தான் நண்பர்கள் கூட என்னை இந்தியனாகவேப்  பார்க்கின்றனர் .

கிகிகிரகம், இந்த வட இந்தியனின் பார்வை மட்டும் ஏனோ, இந்தியா அவனுக்கு மட்டுமே சொந்தமானது போலும் நான் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து குதித்தவள் போலும்  ஏளனப் பார்வை பார்க்கிறான்.

பிரெஞ்சுக் காரனும், பாகிஸ்தான் காரனும் கூட என்னைப் பார்த்து இந்தியனா என்று கேட்கிறான், இந்த வடக்கத்தியானுக்கு வந்த வாழ்வு என்னை பார்த்து தென் இந்தியனா என்று கேட்காவிட்டாலும் பரவாயில்லை மெத்ராசி யா என்கிறான்.

ஐந்து விரல்களும் ஒன்றில்லை என்பதை ஆணித்தனமாக நம்புவள் நான்.ஆகையால் அனைவரையும் குறிப்படவில்லை.எனது கல்லூரிக் காலத்தில் எனக்கு வட இந்திய நண்பர்கள் ஏராளம்.இன்று வரையில் சர்தாஜி நகைச்சுவைகளை ரசிக்கதாவள் நான்.அவர்களை சிங்  என்றுக் கூட அழைத்தில்லை.இந்தியர்களாகவே பார்க்கிறேன் அதையே அவர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.ஆனால் , வட இந்தியர் பலரின் மனதில் நாம்  தமிழர்களாய் மட்டுமே இருக்கிறோம்,இந்தியர்களாக அல்ல என்பதே என் வருத்தம்.

ஒருவேளை அவர்கள் பாடத்திட்டத்தில் இந்தப் பாடம் வைக்கப் படவில்லையோ??அதுசரி,பாடத் திட்டத்திலும் வேற்றுமை தானே!! நமக்கு எப்பவும் அசோகர் மரம் நட்ட கதை மட்டும்  தான்.அவிங்க மட்டும் ஒன்பதாம் வகுப்பிலே மின்னியலை படுச்சி புடுவாய்ங்க.. 

தமிழ் நாட்டில் தான் இன்று வரையில் சாதி பிரச்சனைக்கு  ஓர் நிரந்தரத் தீர்வு இல்லை என்றால்,அதைக் கடந்து தமிழன் இந்தியனாக அனைவராலும் உணரப் படுகிறானா என்றால் அதுவும் இல்லை அங்கேயும் பிரச்சனைத் தான்.



விடை தெரியாக்  கேள்வியுடன்,

ஆதிரா.




10 comments:

  1. //நிவாரண நிதி அனுப்புகிறான்,நெய்காரன் பட்டியில் பிறந்தவன் நாயர் கடையில் சாயா குடிக்கிறான்//

    அடடே! ஹலோ ஆதிரா! அது என்ன "நெய்காரன் பட்டியில்!" ஊர் தெரியுமா??

    வாங்க ஆதிரா! நம்ம ஊரு தான் நெய்காரன் பட்டி பக்கம்! பழனி to உடுமலை கொழுமம்/கொமரலிங்கம் வழியில் உள்ள ஒரு ஊர்...

    ReplyDelete
    Replies
    1. அந்த ஊர் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் நம்பள்கி..அதனால் தான் அந்த பெயரை வைத்து எழுதினேன்.வேறு எந்த உள்நோக்கமும் இல்லிங்கணா...ஊர் பழனி பக்கம் என்று தெரியும்.இதுவரை நான் சென்றதில்லை.இந்த ஊரை எனக்கு அறிமுகப் படுத்திய பெருமை ஆட்டோகிராப் படத்தையே சேரும்.பெயர் வித்தியாசமாக இருப்பதால், நான் பயணிக்காமலே என் மனதில் பதிந்த ஊர்.

      Delete
  2. ம்ம்..உண்மை தான்...கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. ரெம்பப் பெரிய சங்கதி. நான் கொஞ்சம் ஒதுங்கியே....பதிவு நன்றாக உள்ளது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. ஆதிரா.... என்ன குழப்பம் உங்களுக்கு...?

    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா ...

    என்று பாடிய புரட்சி கவிஞர் பிறந்த நாடு.
    நமக்கு என்றும் அடையாளம் இருக்கிறது.
    மற்றவர்களுக்கு அது இல்லை.
    அதனால் மற்றவர்களை ஒட்டு மொத்தமாகச் சொல்கிறார்கள்.
    தமிழர்களை மட்டும் அடையாளத்துடன் சொல்கிறார்கள்.

    நாம் இதைக் குறித்துப் பெருமை படத்தான் வேண்டுமே ஒழிக
    கவலை கொள்ளக்கூடாது... என்பதே என் கருத்து.

    ReplyDelete
  5. குழப்பம் எனக்கில்லை அருணா..தமிழன் என்று தலை நிமர்ந்து நிற்க நான் என்றும் அஞ்சியதில்லை.தாகூரையும் சேக்ஸ்பியரையும் தெரிந்த எத்தனை இந்தியர்க்கு பாரதியைத் தெரியும்..என் பாரதிக்கு விளம்பரம் தேவையில்லை..ஒத்துக் கொள்கிறேன். எனது இடுக்கையின் நோக்கம் தமிழ் நாடு இந்தியாவில் ஒதுக்கப் பட்ட மாநிலமாகிறது.அது இந்தியாவில் தான் இருக்கிறது என்பதையே பலர் மறந்து வருகிறனர்.வெளிநாட்டில் வாழும் நமக்கு அது புரிவது சற்று கடினம் தான்...

    ReplyDelete
  6. USSR Yesterday ...India Tomorrow...sadly inevitable...

    ReplyDelete
  7. You are right. I lived in Delhi and Mumbai. Also Bangalore. Ordinary Tamilians without money or powerful posts are looked down upon by the northeners. Reason is the activities of Tamilnadu politicians.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..

      Delete
  8. உங்க ஆதங்கம் எழுதியவிதத்தில் தெரிகிறது ஆதிரா.

    ReplyDelete