Thursday, May 9, 2013

தமிழக அரசே மாற்றி அமைத்திடு உன் மண்ணாங்கட்டி தேர்வு முறையை!!





இந்தியாவின் இன்றைய கல்வி முறையில் அதிகம் உடன்பாடு இல்லாமல் அதிருப்தியுடன் இப்படி ஒரு பதிவை எழுத காத்திருந்தேன் .பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த சமயத்தை இப்போது பயன் படுத்திக் கொண்டேன்.

கனா கண்கிறேனின் முதன்மையான சமுதாயக் கனவு இந்தியாவில் குறிப்பாக தமிழக கல்வி முறையில் நிச்சயம் ஒரு மாற்றம் வர வேண்டும் என்பதே.

எனது இந்தப் பதிவின் நோக்கம் நமது கல்வி முறை வெறும் ஓட்டப் பந்தயக் குதிரைகளை மட்டுமே உருவாக்குது அதையும் அரசு பொதுத் தேர்வு என்ற முறையில்..எங்கே இருக்கிறது உங்கள் பொது..

எதைக் கொண்டு மதிப்பெண் முறையில் 100 வாங்கியவன் புத்திசாலி எனவும் 60 வாங்கியவன் சராசரி  எனவும் தீர்மானிக்கிறீர்கள்.அறிவியலில் 100 மதிப்பெண் வாங்கியவனைக் கூட ஒரு சுவர் கடிகாரம் எந்த முறையில் எதன் அடிப்படையில் வேலை செய்கிறது என்றுக் கேட்டால் கூட விவரிக்கத் தெரியாத ஒரு கல்வியைத் தானே கொடுத்திருக்கிறீர்கள்.

கடந்த வருட விடைத் தாள்களை கரைத்துக்  குடித்து அதை தேர்வில் வாந்தி எடுத்து மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றுவிட்டால் கொண்டாடுகிறீர்கள்.
பாடம் புரிந்தால் மட்டுமே படிக்க இயலும் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அடுத்தவருடன் ஒப்பிட்டு பேசி அவனைப் பற்றி அவனுக்கே தாழ்வு மனப்பான்மை உண்டு பண்ணிவிடுகிறீர்கள்.

இதயெல்லாம் கூட நான் பொறுத்துக் கொள்வேன்.பறக்கும் படை என்ற பெயரில் பயமுறுத்துகிறீர்களே அதை மட்டும் பொறுக்க முடியவில்லை.

இந்தியாவில் படிப்பைக் தொடர முடியாமல் கைவிடுவதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான்.ஒன்று ஏழ்மை இன்னொன்று தோல்வி.ஏழ்மையிலும் எத்தனையோ மாணவர்கள் சாதிக்கிறார்கள்.அவர்களுகெல்லாம் பண உதவி மட்டும் போதாது தேர்வு முறையை எளிதாக்கியும் உதவிட வேண்டும்.தேர்வு முறைகள் மாறினால் தேர்ச்சிகள் எளிதாகும்.

எதனைக் கொண்டு இதனை பொதுத் தேர்வு என்று சொல்லுகிறீர்கள்???

"பொது" என்ற வார்த்தையின் அர்த்தமென்ன??,அனைவருக்கும் பொதுவான முறையில் இருக்க வேண்டும்.பாரபட்சமில்லாமல் ஊழலில்லாமல் அவர்கள் மேற்படிப்பிற்கு செல்ல வேண்டும் என்பது தானே.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரே மாதிரியான முறையில் தானே மாணவர்கள் தயார் செய்யப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அப்படியா நடக்கிறது தமிழ் நாட்டில்??

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளியால் கடுமையான கேள்விதாள்களுக்கு பதிலளிக்கும் முறையில் தயார் செய்யப் படுகின்றனர்.உதாரணமாக நான் படிக்கும் காலத்தில் என் பள்ளிக்கு கேள்வித் தாள்கள் பாளையங்கோட்டையில் இருந்து வரும்.பள்ளியில் நடத்தப்படும் எல்லா தேர்வுகளும் கடுமையாக இருக்கும். அவற்றில் நாம் 60 சதவிகிதம் எடுத்துவிட்டால் போதும் பொதுத் தேர்வில் 80 எடுத்து விடலாம்.இதன் அடிப்படையில் தான் தனியார் பள்ளி மாணவர்கள் வெல்கிறார்கள்.

அரசு பள்ளிகளில் படிப்போர் ஒரே மாதிரியான எளிதில் அவர்கள் பள்ளியிலேயே அவர்கள் ஆசிரியரால் தயார் செய்யப் படும் கேள்வித் தாள்களுக்கு விடை அளிக்கிறார்கள்.அதனால் எப்போதும் ஒரே நிலையில் இருக்கிறது அவர்களின் மதிப்பெண்கள்.

இப்படி வெவ்வேறு முறையில் மாணவர்களை தயார் செய்து, பந்தயத்தில் ஓட விடுவது,தயிர் சாதம் சாப்பிடறவன பாத்து மாமிசம் சாப்பிடறவன் குஸ்தி க்கு வரியான கூப்பிட்ட கதையா இருக்கு.

எப்போது மாறும் இந்த நிலை..தமிழ் வழியே அரசு பள்ளியில் படித்து தானே அப்துல் கலாம் சாதித்தார்.அந்தக் காலத்தில் எல்லாம் 8 ஆம் வகுப்பு படித்தால் போதும் ஆசிரியர்  ஆகி விடலாம்.இப்பொது அதற்கும் M.Ed வரை படிக்க வேண்டி உள்ளது.

வளர்ந்து வரும் நவீன உலகிற்கு ஏற்றார் போல் பாடங்கள் மாற வேண்டும்  சொல்லித் தரப்படும் முறையும் தேர்வு முறைகளும் மாறவேண்டும்.

ஒரு நாட்டின் மக்கள் தொகை அந்நாட்டின் மிகப் பெரும் பலம்,அது ஒரு போதும் பலவீனம் இல்லை.நம் மக்கள் தொகையின் படி நாம் இந்நேரம் ஆயிரம் அப்துல் கலாமை பெற்றிருக்க வேண்டும்.

கரைத்துக் குடிக்காமல் எதை கேட்டாலும் திருக்குறள் போல் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கல்வி கிடைத்தால் நாம் நிச்சயம் ஆயிரம் கலாமை பெறுவோம்.

தோல்விகளை தூக்கி பேசியதால் நான் அதிகம் தோல்வி கண்டவள் என்று நினைக்க வேண்டாம்.

பத்தாம் வகுப்பில் 90.8 விழுக்காடும், பன்னிரெண்டாம் வகுப்பில் 85 விழுக்காடும் பெற்றிருந்தேன். இந்தப் மதிப்பெண் பெற நான் எந்தத் தியாகமும் செய்யவில்லை.படிப்பதற்கான சூழ்நிலையை என் வீடு எனக்கு எப்போதும் தந்ததில்லை.வகுப்பை முடிந்த அளவு கவனித்து விடுவேன்.அதை தாண்டி என் கையெழுத்து எனக்கு கொஞ்சம் கை கொடுத்தது.

பொதுவாக பெண்கள் எல்லாம் படிப்ஸ் என்பார்கள் .நான் நேரெதிர் , ஆண்களுக்கு இணையாய் விளையாட்டுப் புத்தியுடன் இருப்பேன்.தேர்வின் முதல் நாள் நான் டிவி பார்த்தாலும் பார்க்காதே ஐயோ போச்சு அம்மா போச்சு என்று என் பெற்றோர் ஒரு நாளும் கத்தியதில்லை.

அதன் பின் ,பொறியியல் இளங்கலையை இந்தியாவில் முடித்து பேற்படிப்பை பிரான்சின் முன்னனி அரசு  பல்கலைகழகத்தில்  தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

என்னுடன் படிக்கும் எல்லோரும் இங்கேயே பிறந்து வளர்ந்து அவர்கள் கல்வி முறையில் படித்தவர்கள்.அவர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கான அடித்தளத்தை நான் பெறவில்லை.இருந்தும் நான் துவண்டு போகாமல் முண்டி அடித்து வென்றுக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம். "பந்தயம் இல்லை, இது முதல் குதிரை இது இரண்டாம் குதிரை என்றப் பேச்சில்லை.அவன் படிக்கிறான் உன்னால் ஏன் முடியவில்லை என்ற கேள்வி இல்லை,மற்ற மாணவர் முன் கேள்வி கேட்டு என்னை அசிங்கப் படுத்துவதில்லை.தெரியவில்லை என்ற பதிலை நான் தைரியமாக சொல்லும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.எனக்கு பயமில்லை".

பக்கம் பக்கமா பதிலளிக்கும் கேள்விகளைத் தவிர்த்து பாடத்தின் நடை முறை பயன் பாட்டை அறியும் படி கேள்வி கேட்டால், எந்த ஒரு பாடமும் புரிந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும், என்ற ஒரு தேர்வு முறையைத் தான் நான் கனவு காண்கிறேன்.தேர்வுகள் நடப்படுவதின்  முக்கிய நோக்கம் மாணவன் பாடத்தை புரிந்திருக்கிறானா ??என்று ஆராய்வது மட்டுமே.இதனைத்  தாண்டி வேற எந்த நோக்கமும் என் அறிவுக்கு எட்டவில்லை.

அன்புடன்,
ஆதிரா.


8 comments:

  1. புதுமைப் பெண்ணின் கனவு நனவாகட்டும் ..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா...நீண்ட நாட்களுக்கு பின் வந்திருக்கிறீர்கள்.நன்றி சகோதரா

      Delete
  2. என்னக்கு பிரெஞ்சு கல்விமுறை ரொம்பவே பிடிக்கும். ஒரு சராசரி குழந்தையை கூட பிடித்த துறையில் அறிவாளி ஆக்கி விடுவார்கள். பத்து வருடங்கள் பிரான்சில் வசித்தவன் என்ற முறையில் அனுபவ பூர்வமாக அறிந்தவன் நான்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம் ...கல்வி விடயத்தில் பிரஞ்சு அரசை அடித்துக் கொள்ள ஆளில்லை...16 வயது வரை கல்வி கட்டாயம் கற்றே ஆக வேண்டும்.பள்ளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டிலுருந்தேனும் படித்திருக்க வேண்டும்.அதற்கு பின் அவர்கள் விருப்பம்.12 ம் வகுப்புத் தேர்வு கட்டாயமில்லை அது இருந்தால் தான் மேல படிக்கவே முடியும் என்ற நிலையுமில்லை.அவரவர் விருபத்திற்கு ஏற்ப எதை படிக்கவும் வசதி உண்டு.வருகைக்கு நன்றி

      Delete
  3. அருமையான பதிவு. நம் நாட்டில் தான் மதிப்பெண் வைத்து அளவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்..கொடுமை என்னவென்றால் எதாவது பள்ளியில் வீட்டுப்பாடம் அதிகம் இல்லை, பரீட்சை இல்லை என்றால் பெற்றோர் அது நல்ல பள்ளி இல்லை என்று முடிவு செய்கிறார்கள். பெற்றோர் மனநிலை மாற வேண்டும், கல்விமுறையும் மாற வேண்டும், விரைவாக! உங்கள் கனவு நிறைவேறட்டும். நல்ல பதிவிற்கு நன்றியும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கிரேஸ்..

      Delete
  4. ///என்னுடன் படிக்கும் எல்லோரும் இங்கேயே பிறந்து வளர்ந்து அவர்கள் கல்வி முறையில் படித்தவர்கள்.அவர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கான அடித்தளத்தை நான் பெறவில்லை.இருந்தும் நான் துவண்டு போகாமல் முண்டி அடித்து வென்றுக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம்.///

    அவர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கான அடித்தளமும் , தன்னம்பிக்கையும் நம் நாட்டுக் கலவி தான் கொடுத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். இது என் அபிப்பிராயம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழி...அடித்தளம் இருந்திருந்தால் நான் அவதிப்பட வேண்டியதில்லை..நான் தற்போது படிக்கும் பாடத் திட்டத்தில்(syllabus ) ஒரு 10 % கூட நம் பாடத்திட்டத்தில் இல்லை என்பதே உண்மை.

      எனது இடுக்கையின் நோக்கம் என் புலமை பேசுவதல்ல..உதாரணத்திற்குத் தான் அதைச் சொல்ல வேண்டிதாயிற்று.

      அதை விட முக்கியம், இந்தக் குமுறல் நான் சிலேட்டு பிடித்து எழுதியது முதல் பட்டப் படிப்பு முடித்த வரை அடைந்த அனுபவம்.அயல் நாட்டோடு ஒப்பிட்டு வந்த எண்ணம் என்று நினைக்க வேண்டாம்.

      Delete