Wednesday, February 13, 2013

எங்கள் அழகு தேவதை வினோதினி வாயிலாக..


நண்பர்களுக்கு வணக்கம்!

அமிலம் வீசி அழிந்து போன அழகு பூவை பற்றி அனைவரும் அறிந்ததே.இந்த கோர நிகழ்வின் காரணத்தையும் ,அந்த கொடூரனுக்கு  என்ன  தண்டனை என்பதையும் வலைபூக்களிலும்  ,முகநூளிலும் அதிகமாகவே அலசிவிட்டனர்.

என்னால் முடிந்தது மட்டும் என்ன? எனது கொந்தளிப்பை கொட்ட வந்திருக்கிறேன்.

அந்த அழகு தேவதை பிறந்த அதே ஊரைச் சேர்ந்தவள் என்ற முறையிலும் , அவளை போன்றே சகோதரர் இல்லாது  இரு பெண்களில் ஒருத்தியாய் பிறந்து,உறவினர்கள் ஆதரவில்லாது வளர்ந்து, என் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த இருப்பத்தொரு வயதில் குடும்ப சுமையை கையில் ஏந்தியவள் என்ற முறையிலும் வினோதினியின் அனைத்து கனவுகளையும் என்னை அவளில் வைத்து நன்கே உணர்கிறேன்.

அதை விட அவர் தந்தை இன்று  என்னவெல்லாம்  இழந்திருக்கிறார், இனி அந்த குடும்பம் எப்படி ஒரு  வாழ்வை  வாழும்  என்பதையும்  நன்று  உணர்கிறேன். 

 வீட்டை காக்க வந்த குல தெய்வமாகத் தான் வினோதினி அவர் தந்தை நெஞ்சில்  வாழ்ந்திருப்பார்.அவளின் படிப்பை கொண்டு பெற்றவரின் பசி ஆற்ற ஆவலாய் இருந்தவள் இன்று அழிந்து விட்டாள்.சுரேஷ்க்கும் வினோதினிக்கும் என்ன நடந்தது அவர்கள் வீட்டிற்கும் அவனுக்கும் என்ன தொடர்பு என்பதை எல்லாம் அங்கு அங்கு படித்ததை மட்டும் வைத்து  நான் எழுத விரும்பவில்லை..
 
எனது கேள்வியெல்லாம், நமது கலாச்சாரத்தில் பெண் பிள்ளைகள் மட்டும் இருக்கும் வீட்டில் தந்தை தவிர வேறு ஆண் இல்லை.ஆண் பிள்ளைகளை தேவையற்று வீட்டில் சேர்க்கவும் மாட்டார்கள்.அத்தை பையன், முறை மாமன் கூட  ஒரு வயதிற்கு மேல் வீட்டிற்கு அடிக்கடி வர முடியாது .
 
இப்படி இருக்க, தனக்கு காரணம் இல்லாமல்  எதற்கு ஒருவன் உதவி  செய்ய வேண்டும் என்று ஆராயாமல், தன்  வீட்டில் ஒருத்தனை எதற்கு சேர்க்க வேண்டும்.தொலைக்காட்சியில் கேட்ட வினோதினியின் தந்தை சொன்னதை 
வைத்து தான் இதை எழுதுகிறேன்.

சரி, உதவி என்பது எதிர்பார்த்து செய்வதில்லை , நல்ல மனம் கொண்டவர் என்று வினோதினி தந்தை நினைத்திருந்தால். அவர் தானே அவருக்கு நண்பராய் இருந்திருக்க வேண்டும்.வீட்டில் சேர்த்து விட்டு , நம்பி சேர்த்தேன்  என்று இன்று புலம்பி  பலன் இல்லை.
 
சக மனிதனை நேசிப்பதும்,நம்புவதும் ,வீடு தேடி வருபவனுக்கு விருந்து வைக்க முடியாவிட்டாலும்,கையில் இருப்பதை கொடுத்து அனுப்பும் அதே பண்பாடுடைய தமிழர்கள்  தான், வீட்டின் உள்ளே பெண் பிள்ளைகள் இருந்தால் வீட்டின் திண்ணையில் ஆண்களை  அமர கூட  விடமாட்டார்கள்.
 
மாறி வரும் உலகில், எல்லாம் நவீனமாகி, எது காதல் எது காமம்  என்று  தெரியாமல்  திண்டாடிக் கொண்டிருக்கிறது எம் இளையசமுதாயம். 

உங்கள் பெண் எந்த முடிவு எடுத்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வரும் வரையில் கையிலே வைத்து காத்திடுங்கள். தனியாக  பெண்பிள்ளையை  வளர்ப்பவர்கள் அதிக கவனம் எடுங்கள், உங்கள் பெண் காதலிக்கவோ , காதலிக்கப் படவோ நீங்களே காரணமாகாதீர்கள்.

காதல் ஒரு தலையோ இரு தலையோ ஏமாற்றியவர்  ஆணோ பெண்ணோ, காதல் என்றும் அழிக்காது.தன்னை ஏமாற்றிய பெண் எங்கோ நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தன்னை ஏமாற்றி தாயும்  ஆக்கி  விட்ட பின் கூட, அவனை  அசிங்க  படுத்த  விரும்பாமல்  தன்னை  மறைத்து வாழும் பெண்களும் தான் அதிகம்  இந்த மண்ணில் .
 
 
இப்படி இருக்க தான் செய்த கொடூர செயலுக்கு, என்னை ஏமாற்றினாள்  பழி வாங்க செய்தேன். எனக்கு கிடைக்கவில்லை, யாருக்கும் கிடைக்க வேண்டாம் என செய்தேன்.என்  காதலை ஏற்கவில்லை என்னை அவமான படுத்தினால் அதற்காக செய்தேன் என்று ஒரு மனித மிருகம் சொல்லும் எந்த ஒரு காரணங்களையும் ஏற்க முடியாது.

ஒரு பெண்ணை ஒரு தலையாய் காதலிக்கும் ஆண் மகன்களே ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடித்த பின் மட்டுமே அவள் வீட்டை  பற்றி  யோசியுங்கள்.எந்த சூழ்நிலையிலும் ஒரு  பெண்ணை  கவர  வேண்டும்  என்ற எண்ணத்தோடு ஒரு  வீட்டிற்குள் நுழையாதீர்கள்..இதை விட அவர்களை விஷம் வைத்து கொன்று விடலாம்.

எந்த ஒரு தமிழ் சினிமாவையும் பார்த்து காதலில் தவறான வழியை தேர்ந்தெடுக்காதீர்கள். இதை சொல்லக் காரணம் நிறைய படங்களில் காதலிக்கும் பெண் வீட்டில் நுழைந்து அவளுடன் பழக முயற்சிப்பதாகவே காட்சிகள் சித்தரிக்கப் படுகின்றன.
 
வினோதினி வாயிலாகா இனி இப்படி ஒரு கொடூரம் வேண்டாம் என கேட்டுக் கொண்டு கனத்த மனதுடன் முடிக்கிறேன்.
 
பணிவுடன் ,
 
ஆதிரா 
 
 












 

2 comments:

  1. கண்ணில் குருதி வழிந்தது வினோதியின் மரணச் செய்தி கேட்டு...

    இத்தகைய கொடூரங்களுக்கு காரணம் சினிமா என்ற மாயையா... மக்களின் அறியாமையா? எது எப்படியோ... சமூகம் விழித்தெழும் தருணம் இனியேனும் ஏற்படட்டும்... வினோதினியே கடைசி உயிராக இருக்கட்டும்..

    இப்படிப் பட்ட கொடூரன்களுக்கு கொடூரமான தண்டனை உடனே நிறைவேற்ற வேண்டியது அவசியம். அதுவும் ஆசிட் வீசியே கொல்ல வேண்டும்... தயவு தாட்சண்யம் பார்க்க கூடாது...

    அப்படி செய்தால்தான் வக்கிரம் கொண்ட ஆண்வர்க்கம் அடங்கும்...

    ReplyDelete
    Replies
    1. தன்னை விட வலிமை குறைந்தவள் தானே இவளால் என்ன செய்து விட முடியம்! என்ற எண்ணம் இருக்கும் வரையில் இந்த வக்கிரம் கொண்ட ஆண் வர்க்கம் அடங்கப்போவதில்லை..

      Delete